சென்னை, கடலூர், விழுப்புரத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை: புதுவை மாநில எல்லையில் கடும் கட்டுப்பாடு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க புதுவை மாநில எல்லையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2020-06-17 01:11 GMT
புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி நேற்று 21 மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலமாக உரையாடுவதாக அறிவித்திருந்தார். அதில் புதுவை மாநிலமும் இருந்தது. அதன்படி நடந்த காணொலி காட்சியில் 7 மாநில முதல்- மந்திரிகள், கவர்னர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்கப்பட்டது. எனக்கு இன்று (நேற்று) பிரதமரிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

புதுவையில் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை 18 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரைதான் வருமானம் வந்துள்ளது. இதனால் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் ரிசர்வ் வங்கியை நாட வேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு எங்களுக்கு தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும். வருமான இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் மாநில பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளேன்.

தொடர்ந்து 6-வது முறையாக பிரதமருடன் காணொலி காட்சி மூலம் உரையாடி வருகிறோம். கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறார்களே தவிர எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றுவது இல்லை. நிதி தொடர்பாக எந்த ஒரு பதிலும் வரவில்லை. இந்த முறை மாநிலங்களின் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பிரதமர் புதுவைக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுக்குள் இருந்த கொரோனா நம் எல்லையை திறந்து விட்டதன் காரணமாக அதிகமாக பரவியுள்ளது. சென்னையில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும். விழுப்புரம், கடலூர் எல்லையில் இருந்து வருபவர்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. காரைக்காலில் கூட நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுதொடர்பாக நான் அமைச்சர்கள், தலைமைச் செயலர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசினேன். அவர்கள் கூறியதன்படி சென்னையில் இருந்து புதுவைக்கு மருத்துவம், திருமண விழா, துக்க நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மூலம் தான் கொரோனா அதிகம் பரவுகிறது.

எனவே முழுமையாக எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். இ-பாஸ் வைத்திருந்தாலும் கூட சென்னையில் இருந்து புதுவைக்கு வருபவர்களை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். கடலூர், விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் இருந்து வருபவர்கள் நீரிழிவு நோய், பிரசவம் போன்ற சிகிச்சைக்காக வரலாம். இதுதவிர வேறு எந்த காரணத்துக்காகவும் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இ-பாஸ் வைத்திருந்தாலும் அவர்களை உள்ளே விடக் கூடாது.

கடைகள் திறக்கும் காலக்கெடுவை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) கடை உரிமையாளர்களை அழைத்துப் பேசி மாலையில் எத்தனை மணிக்கு கடைகளை மூட வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்படும்.

புதுவை மாநிலத்தில் அதிகப்படியான கொரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதேபோல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் சென்று கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதுவையில் தற்போது 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிறைய பேர் குணம் அடைந்துள்ளனர். அவர்களையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவத் துறைக்கு உள்ளது.

மருத்துவத் துறையும், காவல் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து மாநில எல்லையை மூடி வெளியே உள்ளவர்களை உள்ளே அனுமதிக்காமல் இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். புதுவையில் உள்ளவர்கள் மூலம் கொரோனா பரவவில்லை. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் மூலம்தான் பரவுகிறது.

யார் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் இரட்டிப்பாக்கப்படும்.

தற்போது நம்மிடம் வெண்டிலேட்டர், பாதுகாப்பு கவச உடை, உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளன. எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதலான உபகரணங்கள் வாங்க தேவையான நிதியை மாநில அரசில் இருந்து கொடுக்க உள்ளோம். ஒருபுறம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதைப்போல் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். இதற்காக சில கட்டுப்பாடுகளை நாம் கொண்டு வந்துள்ளோம். அவை மாநில நிர்வாகத்தின் சார்பில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்