நாகையில் ஊரக வளர்ச்சித்துறையில் பணி புரியும் கணினி உதவியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்

நாகையில் ஊரக வளர்ச்சித்துறையில் பணி புரியும் கணினி உதவியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2020-06-17 01:02 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் கீழ் 43 கணினி உதவியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.

மருத்துவ காப்பீடு

கொரோனா காலத்தில் பணி பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட எந்த சலுகையும் இல்லாதபோதும் அனைவரும் விடுப்பு எடுக்காமல் இருசக்கர வாகனங்கள் மூலம் அலுவலகத்திற்கு சென்று பணிபுரிகிறோம். எனவே மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். 13 ஆண்டுகளாக ரூ.12 ஆயிரம் மாத ஊதியத்தில் பணி புரியும் கணினி உதவியாளர்களை முதல்-அமைச்சரின் ஆணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை. எனவே நிலுவை தொகையுடன் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குவது, பணி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்