பெட்ரோல்-டீசல் விலையை உடனே குறைக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

பெட்ரோல்-டீசல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-06-17 00:12 GMT
பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜுன கார்கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கொரோனா வைரஸ் காரணமாக நாட்டு மக்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு, பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி வருவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துவிட்டது. ஒரு பீப்பாய் 35 டாலராக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு, பெட்ரோல் மீது 10 ரூபாயும், டீசல் மீது 13 ரூபாயும் வரி உயர்த்தியது.

கச்சா எண்ணெய் விலை சரிவின் பயனை மக்களுக்கு வழங்குவதை விட்டுவிட்டு, அதை மத்திய அரசு பறித்துக் கொண்டது. இப்போது பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. நிதி நெருக்கடியில் இருக்கும் மக்கள் மீது மேலும் சுமையை மத்திய அரசு ஏற்றுகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது பெட்ரோல் மீது ரூ.10.7, டீசல் மீது 4.9 ரூபாய் சுங்க வரி விதிக்கப்பட்டிருந்தது.

மக்களுக்கு வழங்கவில்லை

ஆனால் மத்தியில் பா.ஜனதா அரசு வந்த பிறகு எரிபொருள் மீதான சுங்கவரி 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் மீது ரூ.32.9, டீசல் மீது ரூ.31.8 சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பா.ஜனதா அரசு, பகிரங்கமாக மக்களை சுரண்டுகிறது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.47, டீசல் விலை ரூ.5.8 உயர்த்தப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 110 டாலராக இருந்தபோது கூட, எரிபொருள் விலை இந்த அளவுக்கு இருக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் குறைந்தபோதும், அதன் பயனை மக்களுக்கு வழங்கவில்லை. டீசல் விலை உயர்வால், பஸ், ரெயில்வே கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையாக பாதிக்கும்

இதனால் கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களின் வாழ்க்கையை எப்படி நடத்துவது. ஏற்கனவே தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 50 சதவீத சம்பளம் தான் வழங்கப்படுகிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சிறுதொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும். இது மறைமுகமாக தொழிலாளர்களையும் பாதிக்க செய்யும்.

விவசாயிகள் பழைய முறை விவசாயத்தை கைவிட்டு டிராக்டர் உள்பட எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கு டீசல் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதனால் எரிபொருள் விலை உயர்வு, விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை உடனே குறைக்க வேண்டும். எரிபொருள் மீதான சுங்க வரியை உடனடியாக குறைக்க வேண்டும்.”

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்