மராட்டியத்தில் மேலும் 1,382 பேர் கொரோனாவுக்கு பலி - திருத்தப்பட்ட பட்டியலில் அதிர்ச்சி தகவல்

மராட்டியத்தில் மேலும் 1,382 பேர் கொரோனாவுக்கு பலியான அதிர்ச்சி தகவல் திருத்தப்பட்ட பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.

Update: 2020-06-16 23:10 GMT
மும்பை, 

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசு கொேரானா பலி எண்ணிக்கையை மறைப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்தநிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான பணியை செய்ய மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்களுக்கு அரசு உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி மாநிலத்தில் இதுவரை கூடுதலாக 1,382 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது திருத்தப்பட்ட பட்டியல் மூலம் தெரியவந்தது.

இதுகுறித்து மாநில தலைமை செயலாளர் அஜாய் மேத்தா கூறியதாவது:-

கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் மேலும் 1,382 அதிகரித்து உள்ளது. மாநில அரசு எந்த தகவல்களையும் மறைக்கவில்லை. கொரோனா தரவுகளை சரிபார்த்து இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த உயிரிழப்புகளை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பையில் 862 பேர்

மாநில அரசின் புதிய தகவலின்படி மும்பையில் கூடுதலாக 862 பேரும், மற்ற பகுதிகளில் 466 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் அகமதுநகர் - 1, அகோலா -14, அமராவதி - 6, அவுரங்காபாத் - 33, புல்தானா - 2, துலே - 2, துலே -12, ஜல்காவ் - 34, ஜல்னா - 4, லாத்தூர் - 3, நாந்தெட் - 2, நாசிக் - 28, ஒஸ்மனாபாத் - 3, பால்கர் -11, பர்பானி - 1, புனே-85, ராய்காட் - 14, ரத்னகிரி-1, சாங்கிலி - 4, சிந்துதுர்க் - 3, சோலாப்பூர் -41, தானே - 146, வாசிம்-1, யவத்மால்-1.

நேற்றைய நிலவரம்

இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 701 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 445 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலத்தில் இதுவரை 57 ஆயிரத்து 851 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 50 ஆயிரத்து 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் நேற்று புதிதாக 81 பேர் பலியானார்கள். திருத்தப்பட்ட பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1,328 பேருடன் மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 538 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மும்பையில் நேற்று 935 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை நகரில் 60 ஆயிரத்து 228 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மும்பையில் புதிதாக 55 போ் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் நகரில் வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 167 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்