கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடலில் மாயமான 4 மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
கொரோனா ஊரடங்கு தளர்வு மற்றும் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந்தேதி, 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்து நேற்று முன்தினம் காலை கரை திரும்பினர்.
இந்தநிலையில் ராமேசுவரத்தை சேர்ந்த ஹென்றோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மட்டும் இதுவரை கரை திரும்பவில்லை. அதில் சென்ற மீனவர்கள் ரெசின் பாஸ்கர், மலர், ஆனந்த், சேசு ஆகிய 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இதுதொடர்பாக படகு உரிமையாளர் ஹென்றோ, மீன்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாயமான மீனவர்களை தேடி 2 படகுகளில் 8 மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். இதேபோல மண்டபம் கடலோர காவல்படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்களும் மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாயமான 4 மீனவர்களையும் கண்டுபிடிக்க வலியுறுத்தி நேற்றுமாலை 6 மணி அளவில் அவர்களது உறவினர்கள் ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சிவா, கட்சி நிர்வாகிகள் அசோக், கருணாகரன், கருணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.