பாலக்கோடு அருகே, ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொப்பிடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் தனுஷ் (வயது 11). இவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிறுவன் தனுஷ் வீட்டை விட்டு திடீரென மாயமானான். பெற்றோர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது அதேபகுதியில் உள்ள புங்கன்குட்டை ஏரியில் ஒரு சிறுவன் பிணமாக மிதப்பதாக அக்கம் பக்கத்தினர் கிராமமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் விரைந்து சென்று பார்த்தபோது பிணமாக மிதப்பது தனுஷ் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சிறுவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் ஏரியில் குளிக்க இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.