வேடசந்தூர் அருகே ஆட்டை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய சலூன் கடைக்காரர் தவிப்பு - தீயணைப்பு படையினர் மீட்டனர்

வேடசந்தூர் அருகே ஆட்டை காப்பாற்றுவதற்காக கிணற்றில் இறங்கிய சலூன் கடைக்காரர் மேலே வர முடியாமல் தவித்தார். அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Update: 2020-06-15 03:37 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சீத்தமரம் நால்ரோட்டில் சலூன் கடை வைத்திருப்பவர் சுப்பிரமணி (வயது 41). நேற்று காலை இவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து ஒட்டநாகம்பட்டியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு கிடா வெட்டி சாமி கும்பிடுவதற்கு சென்றார்.

அப்போது சாமிக்கு பலியிடுவதற்கு கொண்டு சென்ற ஆடு, கோவில் அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. அந்த கிணற்றில் 3 அடி தண்ணீர் இருந்தது. இதை பார்த்த சுப்பிரமணி ஆட்டை காப்பாற்ற கயிறு கட்டி கிணற்றில் உள்ளே இறங்கினார். பின்னர் கிணற்றில் இருந்த ஆட்டை அவர் கயிற்றில் கட்டினார். பின்னர் அவருடைய உறவினர்கள் அந்த ஆட்டை மீட்டனர்.

அதன்பிறகு கிணற்றில் இருந்து கயிறு மூலம் சுப்பிரமணி ஏற முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. மேலும் அந்த கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் அவர் மேலே வர முடியாமல் தவித்தார். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு அவருடைய உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் திருகோல்நாதர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி, பிளாஸ்டிக் வலை மூலம் கிணற்றில் தவித்த சுப்பிரமணியை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்