கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.30 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பெரும்பாலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை வழியாக புகையிலை பொருட்கள் கடத்தி செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் பெரும்பாலை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சாணார்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் வேனில் சோதனை செய்தனர்.
அப்போது வேனில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருந்தன. அவற்றை போலீசார் பிரித்து பார்த்தபோது ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வேன் டிரைவர் மதுரையை சேர்ந்த ஷேக்அப்துல்லா (வயது 34) என்பதும், அவருடன் வந்தவர் அங்கிஸ்தான் (36) என்பதும் தெரியவந்தது.
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு இவர்கள் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.