கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாகனத்தில் செல்லும் கிராம மக்கள்
கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கிராம மக்கள் வாகனத்தில் சென்று வருகின்றனர்.
திருப்பத்தூர்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இதையடுத்து இந்த வைரசில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகள் காரணமின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும்படி பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கிராம பகுதிகளில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் உள்ளனர். வாகனங்களில் கூட்டமாக செல்வதை தவிர்க்காமல் உள்ளனர்.
திருப்பத்தூர் அருகே பிராமணகுறிச்சி கிராமத்தில்கண்மாய் குடிமராமத்து செய்வது சம்பந்தமாக இருபிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சமாதான பேச்சுவார்த்தைக்காக சென்ற கிராம மக்கள் சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சிலர் முககவசம் அணியாமல் கூட்டமாக சென்றனர்.
அந்த பகுதியில் போதிய விழிப்புணர்வு இல்லாததை எடுத்துக்காட்டும் வகையில் இந்த செயல் உள்ளது. இவ்வாறு அவர்கள் செல்வதால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.