சேலத்தில், அம்பேத்கர் சிலையை அகற்றாமல் ரெயில்வே மேம்பாலத்தை கட்ட வேண்டும் - பல்வேறு அமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை
சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை அகற்றாமல் ரெயில்வே மேம்பாலத்தை கட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம்,
சேலம் செரி ரோட்டில் முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் தொங்கும் பூங்கா எதிரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை அங்கிருந்து அகற்றப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய குடியரசு கட்சி, தமிழ் கலாசார இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சேர்ந்து டாக்டர் அம்பேத்கர் சிலை பாதுகாப்பு கூட்டமைப்பு என உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரு சிலர் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாநகரில் தொங்கும் பூங்கா அருகே டாக்டர் அம்பேத்கரின் சிலையானது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. தற்போது அங்கு ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் அங்குள்ள அம்பேத்கர் சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டு பணிகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே அம்பேத்கர் சிலைக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தாமல் ரெயில்வே மேம்பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை மாவட்ட கலெக்டர் அழைத்து கருத்து கேட்பு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். சேலம் மாவட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக முடிவு எடுக்கும் வரை டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்க வேண்டும். சேலத்தில் வேறு எந்த இடத்திலும் டாக்டர் அம்பேத்கர் சிலை கிடையாது. எனவே அம்பேத்கர் சிலையை அகற்றாமல் ரெயில்வே மேம்பாலத்தை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.