நிவாரணம் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா நிவாரணம் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-06-13 06:39 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கட்டுமான தொழிலாளர் நலச்சங்க தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பேரின்பராஜ், சி.ஐ.டி.யு. சங்க மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு வரிசையாக நின்று கொடிகளையும், கோரிக்கை அட்டைகளையும் ஏந்தி கோஷங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் லட்சக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். இவர்கள் கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த 2 மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் முடங்கி உள்ளனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் கட்டிட பணிகள் பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல், குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் 2 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை. எனவே தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் நிவாரணம் முழுமையாக கிடைக்கவேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாத தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். எந்த வேலையும் இல்லாமல் சிரமப்படும் கட்டிட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை குறைத்து கட்டுமான பணிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேம்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தில் புதுப்பித்தல் பதிவு பண பயன்களுக்கான விண்ணப்பங்கள் பெற்று பணியை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் காளிதாஸ், செயலாளர் அப்துல் அஜீஸ், பொருளாளர் சங்கரநாராயணன், நிர்வாகி நயினாமுகமது உள்ளிட்டவர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் 50 அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் எங்கள் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி அளிப்பது நிறுத்தப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டு உள்ளன. இதனால் அலுவலக வாடகை, தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், வாகனங்களுக்கான கடன் தவணை, ஊழியர்களுக்கு சம்பளம் போன்றவற்றில் மிகுந்த சிரமப்பட்டு உள்ளோம்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி அரசு வெளியிட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து எங்களது பயிற்சி பள்ளிகளை திறக்கவும், வாகன பயிற்சி அளிக்கவும் அனுமதி வழங்க வேண்டும்.

பயிற்சியின் போது உரிய சமூக இடைவெளி, சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்போம். தற்போது ஓட்டுனர் பயிற்சிக்கு பதிவு, தேர்வு, புதுப்பித்தல் போன்றவற்றுக்கு தலா 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனை தினமும் தலா 150 ஆக உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்