பணப்பலன்களை வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

திண்டுக்கல்லில் தூய்மை பணியாளர்கள் பணப்பலன்களை வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2020-06-12 23:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் வேலை செய்கின்றனர். இவர்கள் மாநகராட்சி வார்டு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பணியாற்றி ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படும். இந்த நிலையில் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற 8 பேர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ஓய்வுபெற்று 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் தங்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என்றும், எங்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் அவர்களுக்கு பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்