சேவூரில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டெடுப்பு

அவினாசி வட்டம் சேவூரில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.

Update: 2020-06-12 02:58 GMT
சேவூர், 

அவினாசி வட்டம் சேவூரில் எஸ்.ஆர்.பெட்ரோல் பங்க் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழைகாரணமாக மண்ணில் புதைந்திருந்த நடுகல்லின் ஒரு பகுதி வெளியே தெரிந்தது. இதுபற்றி நில வருவாய் ஆய்வாளர் ராமசாமி மற்றும் தனிப்பிரிவு காவலர் வெள்ளியங்கிரி ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த நடுகல்லை சுத்தம் செய்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கல் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகர் கால வகையான அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் ஆகும். முதல் நிலையாக போர்க்களக்காட்சி அமைந்துள்ளது. வீரன் வலது கையில் வாளும் இடக்கையில் கேடயமும் வைத்துள்ளான். வீரன் எதிர்கொள்ளும் மற்றொரு வீரனை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிற்பம் சிதைவுபட்டுள்ளது. யாரை எதிர்கொள்கிறான் என்பது இதனால் தெரியவில்லை.

சதிக்கல்

இப்போரில் அவன் இறந்து பட்டதால் அவனது 2 மனைவியரும் சிதையில் விழுந்து உயிர்துறந்துள்ளனர். அடுத்த நிலை தேவகன்னியர் 2 பேர் வலது இடது புறங்களில் சூழ இறந்து பட்ட வீரனையும், அவனது 2 மனைவியரையும் வானுலகம் அழைத்துச்செல்லுதல் ஆகும். தேவகன்னியரின் கரத்தில் சாமரம் வீசுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

3-வது நிலையில் வீரனும் 2 மனைவியரும் சிவலோகப்பதவி அடைகின்றனர். நந்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி நிலையாக வீரன் சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து சிவபதம் சேர்தல் ஆகும். இவ்வீரன் இப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். வீரன் மற்றும் அவனது மனைவியரின் ஆடை அணிகலன்களைக்கொண்டு நோக்கும் போது இது புலப்படுகிறது. இக்கல் 6 அடி உயரமும், 4 அடிஅகலமும், 5 இஞ்ச் கனமுள்ள பலகைக்கல் ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் ஜான் பீட்டர் கூறுகையில் இது அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் என உறுதிப்படுத்தினார். இக்கல்லை பாதுகாக்க நடவடிக்கைகள் நிலவருவாய் ஆய்வாளர் ராமசாமி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்