சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல்: கொரோனா பீதியில் சென்னையில் இருந்து புறநகர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல் உள்ளதால் கொரோனா பீதி காரணமாக சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.

Update: 2020-06-11 22:30 GMT
சென்னை,

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஊடுருவி கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இப்போதைய நிலை நீடித்தால் ஜூலை மாதம் 15-ந்தேதி நிலவரப்படி கொரோனாவுக்கு தமிழகம் முழுவதும் 3.3 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் கணிக்கப்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான எண்ணிக்கையும் நெஞ்சை உலுக்கும் விதமாக உள்ளது.

குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரசின் கோரப்பிடிக்கு சிக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தை சென்னை எட்டிப்பிடித்துவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. மருத்துவ தலைநகரான சென்னை, கொரோனாவின் தலைநகராகிவிட்டது. கொரோனா பரவல் காரணமாக சென்னைவாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நோய் தாக்கத்தில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது? என்று தெரியாமல் விழி பிதுங்கி போய் நிற்கிறார்கள்.

சென்னை நகரத்தில் மட்டும் சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். குறுகலான தெருக்கள், நெரிசலாக அமைந்துள்ள வீடுகள், சிறிய வீடுகளில் 6 முதல் 7 பேர் வசித்து வருவதால் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வேகமாக தாவிச் சென்றுவிடுகிறது. இதுவே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு சவாலான பணியாக இருப்பதாக அரசு சொல்கிறது. இருந்தபோதிலும் முககவசம் அணியவேண்டும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

சென்னையை பொறுத்தமட்டில் இம்மி அளவு கூட இடைவெளி இன்றி, புறா கூண்டு போல அடுத்தடுத்து வீடுகள் இருப்பதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது சவாலான காரியம் ஆகும். நெரிசலான பகுதி என்பதால் கொரோனாவிடம் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள சென்னை நகர்ப்புறத்தில் இருந்து சிலர் புறநகர் பகுதிகளுக்கும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் எல்லைகளில் உள்ள பகுதிகளுக்கும் படையெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பணியிடச்சூழல், பிள்ளைகளின் படிப்பு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நகர்ப்புற பகுதிகளை விரும்பிய பலரும் இப்போது சென்னையை வெறுத்து ஒதுக்க தொடங்கியிருக்கிறார்கள். வந்தவர்களை வாழ வைக்கும், சிங்கார சென்னை இப்போது, இருப்பவர்களை புறநகர் பகுதிகளுக்கு வழி அனுப்பி வைக்கும் சென்னையாக மாறிவிட்டது. புறநகர் பகுதிகளுக்கு படையெடுக்கும் படலம் தொடங்கியிருப்பதால், நகர்ப்புறத்தில் உள்ள சில வீடுகளின் சுவர்கள் ‘வீடு வாடகைக்கு‘ என்ற வாசகம் அடங்கிய போர்டுகளை மாலையாக அணிந்து நிற்கிறது.

கொரோனாவின் பிடியில் இருந்து சென்னை பீனிக்ஸ் பறவை போல மீண்டு எழும் காலம் கனியும் வரை உயிரை தற்காத்துக்கொள்ள புறநகர் பகுதிகளுக்கு மக்களின் படையெடுப்பு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து சிங்கார சென்னையை மீண்டும் எழில் மிகுந்த நகரமாக மாற்றவேண்டும் என்பதே அனைவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகள்