திருமணமான நாளில், முதல் இரவில் மணப்பெண் கடப்பாரையால் அடித்துக்கொலை - மணமகனும் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

மீஞ்சூர் அருகே திருமணமான அன்று முதல் இரவின்போது ஏற்பட்ட தகராறில் புதுமணப்பெண்ணை கடப்பாரையால் அடித்துக்கொலை செய்துவிட்டு மணமகனும், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2020-06-12 00:00 GMT
மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள சோமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிவாசன் (வயது 27). இவருக்கும், எண்ணூர் சடையங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவருடைய மகள் சந்தியாவிற்கும் நேற்று முன்தினம் காலை வாயலூர் கொக்குமேடு கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது.

அதன் பின்னர் மணமக்கள் இருவரும் சோமஞ்சேரி கிராமத்திற்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு நீதிவாசனுக்கும், சந்தியாவுக்கு முதல் இரவு நடைபெற்றது. இருவீட்டு உறவினர்களும் மணமகன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். முதல் இரவின்போது நள்ளிரவில் புதுமணப்பெண்-மணமகன் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நீதிவாசன், அங்கிருந்த கடப்பாரையால் தனது மனைவியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த புதுமணப்பெண் சந்தியா, வலியால் அலறியபடி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார். இதனால் பயந்துபோன நீதிவாசன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையில் சந்தியாவின் அலறல் சத்தம்கேட்டு திடுக்கிட்டு எழுந்த இருவீட்டின் உறவினர்களும் முதல் இரவு நடந்த அறைக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு மணப்பெண் சந்தியா, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த காட்டூர் போலீசார், கொலையான சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய மணமகன் நீதிவாசனை போலீசார் மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று காலை ஆரணி ஆற்றங்கரை அருகில் உள்ள வேப்ப மரத்தில் மணமகன் நீதிவாசன், தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவியை அடித்துக்கொன்றதால் பயந்துபோன அவர், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

காட்டூர் போலீசார் மரத்தில் தொங்கிய நீதிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான அன்றே புதுமணப்பெண்ணை கொலை செய்துவிட்டு, மணமகன் தற்கொலை செய்த சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காலையில் திருமண வீடு உறவினர்களால் கலகலப்பாக இருந்தநிலையில் அன்று நள்ளிரவே மணப்பெண் கொலையால் துக்க வீடாக மாறியது. மணமேடை பூவாசம் மறைவதற்குள் புதுமண தம்பதிகள் இருவரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்