கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டம்

கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2020-06-11 06:49 GMT
மீன்சுருட்டி, 

கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

பரிசோதனை

கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. பின்னர் வழிபாட்டு தலங்களை நிபந்தனையுடன் திறக்க மத்திய அரசு கடந்த 8-ந் தேதி முதல் அனுமதி வழங்கியது. ஆனால் தமிழகத்தில் கோவில்கள் திறப்பு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் கோவில்களின் நடைகள் சாத்தப்பட்டுள்ளன. இதனால் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெளி மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறந்ததையடுத்து, தமிழ்நாட்டிலும் வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி நேற்று காலை 10 மணியளவில் இந்து முன்னணி கட்சியினர் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு, கோவிலை திறக்க கோரி திருச்சி கோட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் கோஷம் எழுப்பினர். மேலும் ஒற்றை காலுடன் நின்று நூதன போராட்டம் செய்தனர். மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் கிளை தலைவர் இளவரசன் ஆகியோர் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் அவர்களை கலைந்து போக செய்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தடையை மீறி

இதேபோல் கோவில்கள் வழிபாட்டிற்கு திறக்காமல் மூடியே இருப்பதால் அதனை திறக்க கோரி ஆண்டிமடம் இந்து முன்னணியினர் போராட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்தனர். 5 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் தடையை மீறி ஆண்டிமடம் விளந்தை மேல அகத்தீஸ்வரர் கோவில் முன்பு ஒற்றைக்காலில் நின்று கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் மனோகரன், சாலக்கரை கிளை தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர்.

மதனகோபாலசுவாமி கோவில்

கோவில்களை திறக்க கோரி பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய கோவில்கள் முன்பு கடந்த மே மாதம் 26-ந் தேதி தோப்பு கரணம் போட்டு நூதன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் 2-வது கட்டமாக நேற்று கோவில்கள் முன்பு ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டம் நடத்தப்பட்டது. பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவர் வழிபட்ட பெருமை பெற்ற மதனகோபாலசுவாமி கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள ஆஞ்நேயர் கம்பத்தின் முன்பும், அகிலாண்டேசுவரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் முன்பும் இந்து முன்னணியினர் சங்கு ஊதி, ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அமர்நாத் யாத்திரிகரும், சிவனடியாருமான குழந்தைசாமி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை தலைவர் நடராஜன், நகர தலைவர் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், சேவாபாரதி மாவட்ட செயலாளர் சிவபாண்டியன் உள்பட இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் முன்பு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில், இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாடாலூர் அருகே உள்ள பூமலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் முன்பும், வி.களத்தூரில் மாரியம்மன் கோவில் முன்பும் இதேபோன்று ஒற்றைக்காலில் நின்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்