திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் வருங்கால வைப்புநிதி அலுவலக புதிய கட்டிடம் கூடுதல் மத்திய கோவை பெருமண்டல ஆணையர் திறந்து வைத்தார்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் வருங்கால வைப்புநிதி அலுவலக புதிய கட்டிடத்தை, வருங்கால வைப்புநிதி கூடுதல் மத்திய கோவை பெருமண்டல ஆணையர் மதியழகன் திறந்துவைத்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், வெள்ளகோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்காக திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலகம் திருப்பூர் அவினாசி ரோடு, காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தொடக்கத்தில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ஓர் ஆய்வாளர் அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்புநிதி அந்தஸ்து பெற்றது. இதற்கென கமிஷனரும் நியமிக்கப்பட்டார்.
மாவட்ட அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது உள்ள கட்டிடம் இடவசதி போதுமானதாக இல்லை. இதைத்தொடர்ந்து பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் வாடகைக்கு பெறப்பட்டது. இந்த புதிய கட்டிட திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதற்கு திருப்பூர் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கி பேசினார்.
பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு
இதில் வருங்கால வைப்புநிதி கூடுதல் மத்திய கோவை பெருமண்டல ஆணையர் மதியழகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசும் போது, “தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த கட்டிடம் கலெக்டர் அலுவலகத்திற்கு எதிர்புறம் இருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தொழிலாளர்கள் அதிகமானோர் இங்கு வந்து வருங்கால வைப்புநிதி தொடர்பான தங்களது பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண முடியும்” என்றார்.
கோவை பெருமண்டல ஆணையாளர் முத்து செல்வன், கோவை மண்டல ஆணையாளர் ஜெய்வதன் இங்க்லே ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கோவை மண்டல ஆணையாளர் உன்னி கிருஷ்ணன், கோவை மண்டல உதவி ஆணையர் சுரேஷ், அமலாக்க அதிகாரி லோகநாயகி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண பல்வேறு ஏற்பாடுகளும் இந்த அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது.