குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் முக்கிய தொழில் நகரமாகும். இங்கு விசைத்தறிகள், பஞ்சாலைகள், கோழிப்பண்ணைகள், கரித்தொட்டி ஆலை உள்ளிட்டவைகள் இங்கு முக்கிய தொழில்களாக விளங்குகின்றன. இத்தொழிலை நம்பி ஏராளமான பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
லட்சக்கணக்கானோர் வசித்து வரும் இந்த பல்லடம் நகரில் சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பஞ்சு கழிவுகள் இப்பகுதியில் படிந்து மண் வளம், காற்று, நீர் ஆகியவற்றையும் சீரழிக்கின்றன. மேலும் இதனால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன.
விசைத்தறி கூடங்கள் மற்றும் பஞ்சாலைகளில் இருந்து வெளியேறும் தூசி மற்றும் பஞ்சுக் கழிவுகள் சாலையோரம் மற்றும் மரம், செடி, கொடிகளில்,வேலிகளில் படர்ந்து சுற்றுச்சூழலை சீரழிக்கின்றன. மேலும் கோழிப்பண்ணைகள் உரிய முறையில் பராமரிக்காததால் அதிலிருந்து துர்நாற்றம் மற்றும் ஈக்கள் தொல்லை ஏற்படுகிறது.
பல்லடம் பகுதியில் அதிகரித்துள்ள போக்குவரத்து காரணமாகவும் புகை மற்றும் காற்று ஒளிப்பான்களால் மாசு ஏற்படுகிறது.எனவே பல்லடம் நகரில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
இதேபோல் பல்லடம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் நுழைவாயிலில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளது. குவிந்து கிடக்கும் இந்தக் குப்பைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதே போல் பல்லடம் சின்னக்கரை பகுதியில் போதிய சுகாதார பணிகள் மேற்கொள்ளாததால் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கின்றன. சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.