தூத்துக்குடியில் குப்பைத்தொட்டியில் வெடித்த மர்ம பொருளால் பரபரப்பு
தூத்துக்குடியில் குப்பைத்தொட்டியில் வெடித்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் குப்பைத்தொட்டியில் வெடித்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
மர்மபொருள் வெடித்தது
தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தில் ஒரு ரேஷன் கடை அமைந்து உள்ளது. இந்த கடை அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பெரிய குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த குப்பைத்தொட்டியில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் இருமுறை அடுத்தடுத்து வெடித்தது. இதனால் அங்கு பெரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தாளமுத்துநகர் போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு கிடந்த வெடிமருந்து சிதறல்களை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சட்டவிரோதமாக யாரேனும் வெடிப்பொருட்கள் தயாரித்து, அதனை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குப்பைத்தொட்டியில் பட்டாசு விழுந்து வெடித்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.