உடையார்பாளையம் அருகே சோகம்: தொகுப்பு வீடு இடிந்து விழுந்து 2 பேர் பலி

உடையார்பாளையம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாயினர்.

Update: 2020-06-10 06:31 GMT
உடையார்பாளையம், 

உடையார்பாளையம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாயினர்.

பராமரிப்பு பணி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி இருளர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு வழங்கிய தொகுப்பு வீட்டை சீரமைக்க நேற்று முன்தினம் இரவு சுத்தம் செய்தார். அவருடன் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் செல்வராஜின் மகன் பாண்டியன் (29), அதே தெருவை சேர்ந்த அவரது உறவினர் கருப்புசாமி (16) ஆகியோரும் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் பாண்டியனும், கருப்புசாமியும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிய பாண்டியன், கருப்புசாமியை மீட்டனர்.

2 பேர் பலி

அப்போது அவர்கள் உயிரிழந்து இருப்பது தெரிந்தது. இந்த விபத்தில் செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாண்டியனுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்