கோட்டக்குப்பத்தில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடியை கொலை செய்த 6 பேர் கைது

கோட்டக்குப்பத்தில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-06-10 04:50 GMT
விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் பூமியான்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் கொட்டா ரமேஷ் (வயது 50). பிரபல ரவுடியான இவர் மீது ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, அடி-தடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த 7-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை, விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பம் பகுதியில் வழிமறித்த சிலர் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கொட்டா ரமேசை அவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜிம்பாண்டியன் என்கிற அலெக்ஸ் பாண்டியனை கடந்த ஆண்டு அஸ்வின் என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாகவும், அதற்கு இவ்வழக்கில் கொட்டா ரமேஷ் உறுதுணையாக இருந்து பண உதவி செய்ததாகவும், அதற்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக ஜிம்பாண்டியன் தரப்பினர் கொட்டா ரமேசை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மைக்கேல் இருதயராஜ், செந்தில்விநாயகம் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், விஜயகுமார், கதிரவன், பாபு ஆகியோரை கொண்ட தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதோடு கொலையாளிகளை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடையவர்கள், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை அருகே பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 6 பேரை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் புதுச்சேரி கொசப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் மதன் (22), புதுச்சேரி ராஜா நகரை சேர்ந்த முனுசாமி மகன் பத்மநாபன் (24), புதுச்சேரி சாரம் சக்தி நகரை சேர்ந்த செல்வம் மகன் கராத்தே மணி என்கிற ஆகாஷ் (24), முருங்கம்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்த சிவனேசன் மகன் முகிலன் (26), கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் கார்த்திக் என்கிற ஹரிகரன் (24), அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்த தர்மராஜ் மகன் சதீஷ் என்கிற மணிகண்டன் (26) என்பதும் இவர்கள் 6 பேரும் சேர்ந்து கொட்டா ரமேசை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் விசாரணையில், காலாப்பட்டு சிறையில் உள்ள பிரபல ரவுடிகளான மர்டர் மணிகண்டன் மற்றும் மடுவுபேட் சுந்தர் ஆகியோரின் தூண்டுதலின் அடிப்படையிலேயே இந்த கொலை சம்பவம் நடந்ததும், இவர்கள் அனைவருக்குமே பலவிதங்களில் பொதுவான எதிரியாக கருதப்படக்கூடிய அஸ்வினுக்கு கொட்டா ரமேஷ் பண உதவி செய்த காரணத்தினாலேயே இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மதன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்