மணப்பாறை அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை ஹால் டிக்கெட் வாங்கி வந்த நாளில் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு

மணப்பாறை அருகே ஹால் டிக்கெட் வாங்கி வந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-06-10 03:23 GMT
மணப்பாறை, 

மணப்பாறை அருகே ஹால் டிக்கெட் வாங்கி வந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்வில் நீடித்த குழப்பம்

கொடிய வைரசான கொரோனா உலக அளவில் லட்சக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கியதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் முடக்கிவைத்துவிட்டது. கொரோனாவின் தாக்கம் மாணவ சமுதாயத்தையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்று 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.

அதிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் நிலையோ மிகுந்த பரிதாபத்துக்குரியது. தேர்வு அறிவிப்பு, பின்னர் ஒத்திவைப்பு என்று மாணவ-மாணவிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், அனைத்து மாணவ-மாணவிகளும் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

மணப்பாறை மாணவி

இந்த சூழ்நிலையில் 10-ம் வகுப்பு தேர்விற்காக ஹால் டிக்கெட் பெற்று வந்த மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மணப்பாறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சின்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உதயதர்ஷினி (வயது 15). இவர் மரவனூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தேர்வு அறிவிக்கப்பட்டு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வந்ததால் நேற்று முன்தினம் பள்ளிக்கு தனது தந்தையுடன் சென்று ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டார். பின்னர் வீடு திரும்பிய உதயதர்ஷினி யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். அவரது பெற்றோர் வீட்டிற்கு வெளியில் தூங்கவே உதயதர்ஷினி வீட்டிற்குள் தூங்கச் சென்றார். நேற்று காலை அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது, உதயதர்ஷினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. ஹால் டிக்கெட் வாங்கி வந்த நிலையில் தேர்வு நடைபெறும் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்படுமோ என்று நினைத்து இந்த முடிவை தேடிக்கொண்டாரா? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்