தேனி மாவட்டத்தில் 100 இடங்களில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், தேவாரம், கோம்பை உள்பட மாவட்டத்தில் 100 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் உள்ள ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அதற்கு தினசரி ஊதியமாக ரூ.700 நிர்ணயம் செய்ய வேண்டும். தனியார் நிதிநிறுவனங்களின் அடாவடி வசூலை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். மருத்துவ படிப்புகளில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பறிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். அதுபோல், மற்ற இடங்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.