மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் தேர்வு: பா.ஜனதாவில் யாருக்கும் அதிருப்தி இல்லை - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பா.ஜனதாவில் யாருக்கும் அதிருப்தி இல்லை என்று மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்தார்.

Update: 2020-06-09 23:47 GMT
பெங்களூரு,

நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், என்னை விமர்சித்து பேசியுள்ளார். மனநிலை பாதித்தவன் என்று கூறியுள்ளார். யார் மனநிலை பாதித்தவர்கள் என்பதை நான் விரைவில் பகிரங்கப்படுத்துவேன். அவரதுஉடல் மொழியை கொண்டே, யார் மனநிலை பாதித்தவர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

மாநிலங்களவை தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் சாமானிய தொண்டர்களுக்கு கட்சி மேலிடம் டிக்கெட் வழங்கியுள்ளது. இதனால் பா.ஜனதாவில் ரமேஷ்கட்டி, பிரபாகர் கோரே உட்பட யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை. சாமானிய தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கியதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெலகாவி மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். நாங்கள் அவ்வப்போது ஒன்றுகூடி உணவு சாப்பிடுவது வழக்கம். இதில் தவறை கண்டுபிடிக்க முயற்சி செய்வது சரியல்ல. சாமானிய தொண்டர்களுக்கு டிக்கெட் வழங்கி எங்கள் கட்சி மேலிடம் வரலாற்றை உருவாக்கியுள்ளது. பிற கட்சிகள் பா.ஜனதாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

அதைத்தொடர்ந்து மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி கூறுகையில், “பிரபாகர் கோரே, ரமேஷ்கட்டி, பிரகாஷ் ஷெட்டி ஆகியோருக்கு டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சி மேலிடம் ஈரண்ண கடாடி, அசோக் கஸ்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். ரமேஷ்கட்டி, பிரபாகர் கோரே ஆகியோரிடம் நான் பேசியுள்ளேன். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியை கட்டமைக்கும் பணியை மேற்கொள்வோம்” என்றார்.

மேலும் செய்திகள்