ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட2 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது.

Update: 2020-06-09 05:25 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதன்பிறகு கொரோனாவால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்து வந்தனர்.

இதனால் பச்சை மண்டலத்தை ஈரோடு எட்டி இருந்தது. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து வெளியூர் சென்றவர்களால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கும், சூளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 6-ந் தேதி அபுதாபியில் இருந்து சத்தியமங்கலம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் மொடக்குறிச்சி அருகே உள்ள விளக்கேத்தியை சேர்ந்த கல்லூரி மாணவி பாதிக்கப்பட்டு உள்ளார்.

20 வயதுடைய அந்த மாணவி கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மற்றொருவர் ஈரோட்டை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர். செங்கல்பட்டில் உள்ள தனது அண்ணனை சந்திப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றார். அவரது அண்ணன் ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அந்த நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதே ஆஸ்பத்திரியிலேயே அவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரே நாளில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்