தரகம்பட்டி அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்

தரகம்பட்டி அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-06-09 05:04 GMT
தரகம்பட்டி, 

தரகம்பட்டி அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மயில் வேட்டை

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வாழ்வார்மங்கலத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்து பகுதியில் நேற்று முன்தினம் மாலை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாழ்வார்மங்கலம் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது 3 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் மயில்களை வேட்டையாடி கொண்டிருந்தனர். அதில் 2 பேர் பொதுமக்களை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர். ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து, சிந்தாமணிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வாலிபர் கைது

இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கடவூர் சுக்காம்பட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 25) என்பதும், நாட்டு துப்பாக்கி மூலம் மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. மேலும், தப்பியோடியவர்கள் அதே ஊரை சேர்ந்த பழனிச்சாமி, கோபால் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாளிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட 4 மயில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கடவூர் வனத்துறையினரை வரவழைத்த போலீசார், பெருமாளை அவர்களிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான பழனிச்சாமி, கோபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் பெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் மயில்களை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்