கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய-மாநில அரசுகளுக்கு தோல்வி திருநாவுக்கரசர் எம்.பி. குற்றச்சாட்டு

கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டதாக ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.

Update: 2020-06-09 04:21 GMT
ராமநாதபுரம்,

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. ராமநாதபுரம், பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிப்பது மட்டும் அரசின் கடமையாகாது. மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000 கொடுத்தது போதாது. குறைந்தபட்சம் ரூ.5,000 கொடுக்க வேண்டும். இதற்கு ரூ.10,000 கோடி தான் செலவாகும். தமிழக அரசின் வருவாய் ரூ.3 லட்சம் கோடி. மதுக்கடைகள் மூலம் அதிக வருவாய் வருகிறது.

இதில் ரூ.10,000 கோடி கொடுப்பதால் அரசு திவாலாகிவிடாது. மத்திய அரசும் எதுவும் இதுவரை செய்யவில்லை. மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கூட மக்களை சென்றடையவில்லை. மத்திய அரசு மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். மக்களை மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்கி வருகிறது. மின்கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்.

தோல்வி

அரசு ஆஸ்பத்திரியில் இடவசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைகளின் 25 சதவீத படுக்கை வசதியை அரசு கையில் எடுத்து கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும். கொரோனா வரும்முன் தடுப்பதிலும், வந்தபின்பு காப்பதிலும் மத்திய-மாநில அரசுகள் திருப்தியாக செயல்படவில்லை.

கொரோனா பரவலை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா வேகமாக பரவி வருவதால் 10-ம் வகுப்பு தேர்வை தற்போது நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தள்ளிவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், துணை தலைவர் ரமேஷ்பாபு, பரமக்குடி நகர் தலைவர் அப்துல் அஜீஸ், நிர்வாகிகள் செந்தாமரை கண்ணன், சோ.பா.ரெங்கநாதன், ஆலம், கோட்டைமுத்து, வக்கீல் சரவணகாந்தி, காஜா நஜ்முதீன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்