எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை அதிகரிப்பு விற்பனையை ஒழுங்குபடுத்த காவல்துறை அதிரடி நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதன் விற்பனையை ஒழுங்குபடுத்த மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2020-06-09 04:04 GMT
ராமநாதபுரம்,

விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளில் உள்ள உணவுபொருட்களை அழித்து நாசமாக்கும் எலிகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் எலி மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எலி மருந்து பேஸ்ட் வடிவிலும், பவுடர் வடிவிலும், கேக் போன்ற கட்டிகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. எலிகளை அழிக்க கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்து சமீப காலமாக மனிதர்களின் உயிர்களை அதிகஅளவில் பறித்து வருகிறது. அனைத்து கடைகளிலும் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எலி மருந்தை சாப்பிட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டாலும் திடீரென இறந்துவிடுகின்றனர். இதற்கு காரணம் எலிமருந்தை சாப்பிட்டதும் உடனடியாக குடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தில் கலந்து விடுகிறது. இதன்பின்னர் படிப்படியாக கல்லீரலை முடக்கி ரத்தம் உறையும் தன்மை இல்லாமல் போய்விடும். இதனால் மூளை மற்றும் நுரையீரலுக்குள் ரத்தம் கசிய ஆரம்பித்து உடனடியாக இறந்துவிடுகின்றனர்.

எலி மருந்தை சாப்பிட்டதும் வயிற்றுக்குள் உருவாகும் நச்சுத்தன்மை கொண்ட பாஸ்பைன் வாயு நரம்பு மண்டலத்தையும், உடல் இயக்கத்தையும் பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்பத்திரியில் விஷ முறிவு சிகிச்சை அளித்தாலும் வயிற்றில் ஒட்டியுள்ள மருந்து கொஞ்ச நாள் கழித்து அதன் வீரியத்தை அதிகமாக்கி உயிரை பறித்து விடுகிறது. அந்த அளவிற்கு மெல்ல மெல்ல காத்திருந்து கொல்லும் தன்மை இந்த எலிமருந்திற்கு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளால் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் பெரும்பாலான உயிரிழப்பு இந்த எலிமருந்துகளால் தான் நடந்துள்ளது. இதனால் இந்த எலிமருந்து விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:- மாவட்டத்தில் நடைபெற்ற தற்கொலைகளில் 90 சதவீத தற்கொலைகளுக்கு எலி மருந்துதான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு 66 பேரும், இந்த ஆண்டு இதுவரை 13 பேர் வரையும் எலி மருந்து சாப்பிட்டு இறந்துள்ளனர். இதற்கு எலி மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு எலி மருந்து விற்பனை செய்வதை கட்டுப்படுத்தவும், என்ன காரணத்திற்காக வாங்குகின்றனர் என்பதை விசாரித்து விவரங்களை அறிந்து அதன்பின்னர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரி விவசாயத்துறையினருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி வேளாண்மை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மாவட்டத்தில் பூச்சி மருந்து கடைகளில் மட்டுமே எலி மருந்து, எலி பேஸ்ட் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுஉள்ளது. உரிமம் இல்லாமல் இந்த மருந்துகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். விற்பனை செய்வது ஆய்வில் தெரியவந்தால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்