வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த மேலும் 5 பேருக்கு கொரோனா

வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-09 03:06 GMT
சேலம்,

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மாவட்ட எல்லைகளில் அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் வசித்து வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களை ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தம்பதி உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலம் வந்த 3 பேர், மராட்டியத்தில் இருந்து சேலம் வந்த 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 5 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர் களுக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்