கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2020-06-09 02:39 GMT
மதுரை, 

ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் போலீசுக்கு இருப்பது போல, கொரோனாவால் பாதிக்கப்படும் ரெயில்வே ஊழியர் குடும்பத்தினருக்கும் சிறப்பு இழப்பீட்டு தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் வேலைபார்த்த அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஊரடங்கால் வெளியூர்களில் சிக்கிய தொழிலாளர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும். சம்பள பிடித்தம் செய்வதை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை ஏற்கனவே தரவேண்டிய தவணைத்தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

கைவிட வேண்டும்

பணி நேரத்தை நீட்டிப்பது, தொழிலாளர் நலச்சட்டங்களை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும். ரெயில்வே பாதுகாப்பு படையை ஏலம் விடுவதை கைவிட வேண்டும்.

தொழிலாளர் விதி என்ற பெயரில் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கக்கூடாது. கொரோனா பெயரை சொல்லி, கேரள மாநிலத்தில் நடப்பது போல, ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் ஊதியப்பறிப்பு என 18 மாதங்களுக்கு சம்பளத்தை பறிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொழிற்சங்கங்கள்

டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு உதவி கோட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில், கோட்டத்தலைவர் பவுலின், செயலாளர் சங்கரநாராயணன், துணை பொது செயலாளர் திருமலை அய்யப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில், பி.கணேசன் நன்றி கூறினார்.

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கிளை செயலாளர் அழகுராஜா தலைமை தாங்கினார். ரவிசங்கர் முன்னிலை வகித்தார். மதுரை கோட்ட செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் கோரிக்கைககளை வலியுறுத்தி பேசினர்.

மேலும் செய்திகள்