நேபாள எல்லையில் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
நேபாள எல்லையில் மாடு கடத்தும் கும்பலால் கொல்லப்பட்ட குமரி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
அழகியமண்டபம்,
நேபாள எல்லையில் மாடு கடத்தும் கும்பலால் கொல்லப்பட்ட குமரி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ராணுவ வீரர்
குமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே குருந்தன்கோடு வீரவிளையை சேர்ந்தவர் பங்கிராஜ், விவசாயி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர்களின் 3-வது மகன் மணிகண்டன் (வயது 28). திருமணமாகாதவர். இவர் 2014-ம் ஆண்டு மத்திய துணை ராணுவ படையில் பணியில் சேர்ந்தார். கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி மணிகண்டன் உள்பட 3 வீரர்கள் பீகார்-நேபாள எல்லை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நேபாளத்தில் இருந்து பீகாருக்கு ஒரு லாரியில் மாடுகள் கடத்தி கொண்டு வரப்பட்டது. அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, லாரியில் வந்த கடத்தல் கும்பல் அவர்களை கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு மாடுகளுடன் தப்பி சென்றனர்.
உடல் சொந்த ஊருக்கு வருகை
காயமடைந்த 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 5-ந் தேதி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான வீரவிளைக்கு எடுத்து வந்தனர். அவரது உடலை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்
நேற்று காலையில் ராணுவ வீரரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஸ் சாஸ்திரி, இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., கட்கோட்டுதலை பஞ்சாயத்து தலைவர் ஜெரால்டு கென்னடி, கல்குளம் தாசில்தார் ஜெகதா மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, காலை 8.30 மணியளவில் ராணுவ வீரரின் உடல் குடும்ப கல்லறை தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக உடலை மூடியிருந்த தேசிய கொடியை ராணுவ வீரர்கள் அகற்றி மணிகண்டனின் தந்தை பங்கிராஜிடம் கொடுத்தனர். அடக்க நிகழ்ச்சியில் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.