சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் தனி பஸ்சில் மதுரை பயணம்
சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் தனி பஸ்சில் மதுரை புறப்பட்டு சென்றனர்.
நாகர்கோவில்,
சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் தனி பஸ்சில் மதுரை புறப்பட்டு சென்றனர்.
தொழிலாளர்கள்
குமரி மாவட்டத்தில் வசிக்கும் சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் பலர் சொந்த மாநிலம் செல்ல விருப்பம் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் நேற்று மதுரையில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு தனி ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயிலில் குமரி மாவட்டத்தில் உள்ள சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மகிழ்ச்சியோடு புறப்பட்டனர்
அதன்படி நேற்று காலை நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அதன்படி 15 பேர் நேற்று வந்திருந்தனர். அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பொட்டலம் போன்றவை வழங்கப்பட்டது.
பின்னர் அவர்கள் அரசு பஸ் மூலம் மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் கலந்துகொண்டு அவர்களை அனுப்பி வைத்தார். சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியோடு புறப்பட்டு சென்றனர்.
காங்கிரஸ் உதவி
முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினரும், புலம் பெயர் தொழிலாளர்கள் நல மைய ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான ராபர்ட் புரூஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வைகுண்டதாஸ், திருத்துவதாஸ், மகாதேவன்பிள்ளை, சிதம்பரம் விஜய் மற்றும் பலர் சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பிரட், பிஸ்கட் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கி வழியனுப்பினர். அதற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து நாகலாந்துக்கு புறப்பட்டுச் செல்லும் தனி ரெயிலில் குமரி மாவட்டத்தில் வசிக்கும் அந்த மாநில தொழிலாளர்கள் 36 பேர் பயணம் செய்ய உள்ளனர்.