75 நாட்களுக்குப் பின் அனுமதி: சனிபகவான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 75 நாட்களுக்குப் பின் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-06-09 00:26 GMT
காரைக்கால்,

நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி புதுவை அரசு இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை அனைத்து கோவில் நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதை பின்பற்றி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

பிரசித்தி பெற்ற காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான், காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள், கைலாசநாதர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவில் வாசல்களில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் நிற்பதற்காக வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. நுழைவு வாசல் அருகே பக்தர்கள் கை, கால் கழுவ தண்ணீர், சோப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

அதன்படி கோவில்களில் பக்தர்கள் வரிசையாக வந்தனர். கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு வந்த அவர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவை பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

75 நாட்களுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்படவில்லை. அர்ச்சனை எதுவும் செய்யப்படவில்லை. முன்னதாக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் சனிபகவான் கோவிலில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல் காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லா பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம்கள் நேற்று மகிழ்ச்சியுடன் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் வழக்கமாக ஒருவரை ஒருவர் கட்டித்தழுவாமல் சலாம் வைத்தனர்.

மேலும் செய்திகள்