ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஊரடங்கால் மூடப்பட்ட மண்டிகள் மீண்டும் திறப்பு 20 டன் காய்கறிகள் ஏலத்துக்கு வந்தது
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஊரடங்கால் மூடப்பட்ட மண்டிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இங்கு 20 டன் காய்கறிகள் ஏலத்துக்கு வந்தது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 6 காய்கறி மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதனை மொத்த வியாபாரிகள் வாங்கி, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி மண்டிகள் மூடப்பட்டன. இதனால் காய்கறிகளை ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் சாலையோரங்களில் 3 இடங்களில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வந்தது.
மீண்டும் திறப்பு
திறந்தவெளியில் நடந்ததால் மழையால் பாதிப்பு ஏற்படும் நிலை இருந்தது. இதனால் காய்கறி மண்டிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் மண்டிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.அதன்படி ஊட்டி மார்க்கெட்டில் நேற்று முதல் காய்கறி மண்டிகள் திறக்கப்பட்டு உள்ளன. கேரட், பீட்ரூட், முள்ளங்கி, டர்னீப், பீன்ஸ் போன்ற காய்கறிகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். காய்கறிகள் எடை போடப்பட்டு, தார்பாயில் கீழே கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டது.
20 டன் ஏலம்
பின்னர் ஊட்டியில் இருந்து கேரளா, கர்நாடகா மற்றும் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 20 டன் காய்கறிகள் ஏலத்துக்கு வந்தன. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் ஏலம் நடந்தது. வெளியிடங்களுக்கு காய்கறிகள் அனுப்புவது 1 மணிக்குள் முடிக்கப்பட்டது.
கடந்த பல நாட்களாக ஊட்டியில் காய்கறி மண்டிகள் மூடப்பட்டு இருந்ததால், விவசாயிகள் அதிக வாடகைக்கு சரக்கு வாகனத்தை அமர்த்தி மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். எனினும் குறைந்த விலை கிடைத்ததால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஊட்டியில் மீண்டும் காய்கறி மண்டிகள் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஊட்டிக்கு வந்து காய்கறிகளை விற்பனை செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.