தஞ்சையில் டாக்டர் தம்பதியை தாக்கி 11¼ பவுன் நகை-ரூ.1¼ லட்சம் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தஞ்சையில், டாக்டர் தம்பதியை தாக்கி 11¼ பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-06-08 22:47 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையில், டாக்டர் தம்பதியை தாக்கி 11¼ பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

டாக்டர் தம்பதி

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 53). இவருடைய மனைவி சுதா(47). இவர்கள் இருவரும் டாக்டர்கள் ஆவர். மணிமாறன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். சுதா அதே மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

டாக்டர் தம்பதியினர் இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் காரில் பிள்ளையார்பட்டி-அம்மன்பேட்டை புறவழிச்சாலை பகுதிக்கு சென்றனர். அப்போது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்தில் இருவரும் காற்று வாங்குவதற்காக அமர்ந்து இருந்தனர்.

தாக்கி நகை-பணம் பறிப்பு

அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள், பாலத்தில் அமர்ந்து இருந்த டாக்டர் தம்பதியான மணிமாறன், சுதா ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் மணிமாறனை மர்ம நபர்கள் பாலத்துக்கு கீழே அழைத்துச்சென்று அவருடைய தலையில் பீர் பாட்டிலால் தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை பறித்தனர். தொடர்ந்து அவருடைய மனைவி சுதாவையும் தாக்கி அவரிடம் இருந்து 6¼ பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த டாக்டர் தம்பதியினர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலைவீச்சு

இதுகுறித்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் தம்பதியினரை தாக்கி 11¼ பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் தம்பதியினரை தாக்கி நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்