ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் பொது மக்கள் அமர்ந்து சாப்பிட்டனர்
அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் பொது மக்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.
மேட்டுப்பாளையம்,
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 70 நாட்களுக்கு மேலாக மூடியிருந்த டீ கடைகள் மற்றும் உணவகங்களில் நேற்று முதல் அமர்ந்து சாப்பிடுவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியது. அத்துடன் அரசு அறிவித்து உள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டன.
அதன்படி நேற்று கோவை மாவட்டம் முழுவதும் ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. ஓட்டலுக்கு வருபவர்களுக்கு உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் வெப்பநிலையை கண்டறிந்த பின்னர், கிருமி நாசினி திரவம் மூலம் கைகழுவிய பின்புதான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்
ஓட்டல்களில் 2 பேர் அமர்ந்து சாப்பிடும் இருக்கைகளில் ஒருவரும், 4 பேர் அமர்ந்து சாப்பிடும் இருக்கைகளில் 2 பேரும், 6 பேர் அமர்ந்து சாப்பிடும் இருக்கைகளில் 3 பேரும் அமர அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதால், சிலர் தங்கள் குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவை வாங்கி மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.
ஓட்டல்களில் ஏற்கனவே பார்சல் வழங்கப்பட்டு வருவதால், கூட்டம் அதிகளவில் இல்லை. குறிப்பிட்ட ஓட்டல்களில் மட்டுமே கூட்டம் இருந்தது. மற்ற ஓட்டல்களில் கூட்டம் மிகக்குறைவாகதான் இருந்தது. அதுபோன்று பேக்கரி மற்றும் டீ கடைகளில் அமர்ந்து டீ அருந்த அனுமதி வழங்கப்பட்டது. அங்கும் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.
இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது:-
சமூக இடைவெளி
உணவகங்களில் வழக்கமான கட்டணங்களே வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக கட்டணங்கள் வசூலிப்பது இல்லை. பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் முகக்கவசம் அணிவதையும், பாதுகாப்பு உபகரணங்களுடன் வாடிக்கையாளருக்கு சமூக இடைவெளியுடன் உணவைப் பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள்பட அனைத்து பகுதிக ளிலும் ஓட்டல்கள் திறக்கப் பட்டு சமூக இடைவெளியுடன் பொது மக்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.
50 சதவீத கடைகள் திறப்பு
மேட்டுப்பாளையத்தில் 50 சதவீத ஓட்டல்கள் திறக்கப்பட்டன. முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டும் ஓட்டல்களில் சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாதவர்களை ஓட்டலுக்குள் சாப்பிட அனுமதிக்கவில்லை. மேட்டுப்பாளையம் நகரில் ஓட்டல்களை திறந்ததின் மூலம் வெளியூரிலிருந்து வரும் பொதுமக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தது.வேறு மாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வந்து தங்கி இருந்தவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். மேலும் கொரோனா அச்சம் காரணமாக ஓட்டல்களுக்கு வர பொதுமக்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.