பனியன் கம்பெனி தொழிலாளர்கள் குவிந்ததால் திருச்சியில் இருந்து திருப்பூர், கரூருக்கு 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கம் அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு
பனியன் கம்பெனி தொழிலாளர்கள் குவிந்ததால் திருச்சியில் இருந்து திருப்பூர், கரூருக்கு 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்பட்டது.
திருச்சி,
கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வை தொடர்ந்து, தமிழக அரசு பஸ் போக்குவரத்தை 8 மண்டலங்களாக பிரித்து, சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 6 மண்டலங்களின் மூலம் பஸ்கள் இயக்க உத்தரவிட்டது.
இதில், 4-வது மண்டலத்தில் உள்ள திருச்சி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கரூர், கோவை, திருப்பூர் மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் கோவை மண்டலத்தின் சார்பில் இயக்கப்படுவதால் திருச்சி மண்டல பஸ்கள் பயணிகளை மாவட்ட எல்லையான பெட்டவாத்தலை வரை ஏற்றி செல்கின்றன. அங்கிருந்து கோவை மண்டல பஸ்கள் பயணிகளை கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றி செல்கின்றன.
பனியன் கம்பெனி தொழிலாளர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனி தொழிலாளர்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலும் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களாக தான் உள்ளனர். இன்று (திங்கட்கிழமை) பணிக்கு திரும்ப வேண்டிய தொழிலாளர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் வந்து குவிய தொடங்கினர். இதன் காரணமாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெட்டவாத்தலைக்கு 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கப்பட்டது.
பயணிகளில் பலர் முககவசம் அணிந்தும், ஒரு சிலர் முககவசம் அணியாமலும் வந்திருந்தனர். ஒரு பஸ்சிற்கு 34 பேர் வீதம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பஸ்சில் ஏறுவதற்கு முன்பாக அவர்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நேற்று காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை 40 பஸ்கள் பெட்டவாத்தலைக்கு இயக்கப்பட்டதாகவும், மாவட்ட எல்லையில் தயார் நிலையில் இருந்த கோவை மண்டல பஸ்கள் அவர்களை ஏற்றி சென்றதாகவும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை-திண்டுக்கல்
இதேபோல, மதுரை செல்வதற்கு மாவட்ட எல்லையான துவரங்குறிச்சி வரையும், திண்டுக்கல் செல்வதற்கு வையம்பட்டி வரையும் திருச்சி மண்டல பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த பஸ்களில் எதிர்பார்த்த அளவிற்கு பயணிகள் கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.