கொரோனா எதிரொலி: சில்லரை ஆடை விற்பனை கடைகள் மூடல் வெறிச்சோடி காணப்படும் காதர்பேட்டை
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியின் காரணமாக சில்லரை ஆடை விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளதால், காதர்பேட்டை வெறிச்சோடி காணப்படுகிறது.
திருப்பூர்,
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுபோல் உள்நாட்டு ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது காதர்பேட்டையாகும். இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிற வியாபாரிகள் ஆடைகளை பார்வையிட்டு, ஆர்டர்கள் கொடுத்து செல்வார்கள். மேலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஏராளமான தற்காலிக சில்லரை ஆடை விற்பனை கடைகளும் காதர்பேட்டை பகுதிகளில் செயல்படும். கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
வெறிச்சோடியகாதர்பேட்டை
இதுகுறித்து சில்லரை ஆடை வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்து வருகிற தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர்களுக்கு வார விடுமுறை ஆகும். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது தான் செயல்பட தொடங்கியுள்ளது.
வடமாநில தொழிலாளர்களுக்காகவே காதர்பேட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தற்காலிக ஆடை கடைகளை அமைத்து விற்பனை செய்து வந்தோம். தற்போது அவர்களும் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழக தொழிலாளர்களும் பெரும்பாலானவர்கள் சொந்த மாவட்டங்களில் இருக்கிறார்கள். இதனால் ஆடைகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் கவலையில் உள்ளோம். சில்லரை ஆடை விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளதால், விடுமுறை தினமான இன்று (அதாவது நேற்று) காதர்பேட்டையும் வெறிச்சோடி காணப்பட்டது.