சென்னையில் இருந்து திருவாரூர் வந்த அரசு ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா

சென்னையில் இருந்து திருவாரூர் வந்த அரசு ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-08 03:38 GMT

திருவாரூர்,

தமி்ழகத்தி்ல் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் நலன் கருதி பல்வேறு தளர்வுகளை அரசு செய்துள்ளது. இதுவரை இயல்பு நிலை திரும்பாததால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால் வேலை வாய்ப்பு இல்லாததால் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் திருநெல்லிகாவல் புதூர் பகுதியை சேர்ந்த 58 வயதுடையவர் சென்னையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் செங்கல்பட்டில் இருந்து நீடாமங்கலம் பூவனூர் வந்த பெண் ஒருவர், களப்பால் நல்லூர் ஓ.என்.ஜி.சி.யில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் ஆகிய இருவருக்கும் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால்் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இதில் 43 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 20 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்