வெளி மாநில மொத்த வியாபாரிகள் வருகை இல்லை: தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் தவிப்பு

வெளி மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் சிவகாசி வர முடியாத நிலையில் இங்குள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள்.

Update: 2020-06-08 03:28 GMT
சிவகாசி, 

சிவகாசி பகுதியில் 1000-க்கும் அதிகமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 4 மாதங்களில் அனைத்து உற்பத்திகளையும் முடித்து விட்டு பட்டாசுகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பால் பட்டாசு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. அரசு அறிவித்த தளர்வு காரணமாக தற்போது பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

வருகை இல்லை

இந்த நிலையில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளுக்கு உரிய ஆர்டர் கொடுத்து விட்டு 50 சதவீதம் ரொக்க பணமும் கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் வழக்கமாக வரும் வெளிமாநில மொத்த வியாபாரிகள் யாரும் சிவகாசிக்கு வரவில்லை. இதனால் இங்குள்ள பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு வழக்கமாக வரும் தொகைகள் இந்த ஆண்டு இன்னும் வந்து சேரவில்லை. இதனால் சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதி கிடைக்குமா?

தற்போது இந்தியா முழுவதும் ஒரு மாநிலத்தை விட்டு, இன்னொரு மாநிலத்துக்கு செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ரெயில், விமானம் ஆகியவை குறைந்த அளவில் இயக்கப்படுவதாலும் வெளிமாநில வியாபாரிகள் சிவகாசிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில மொத்த வியாபாரிகள் வடமாநிலங்களில் இருந்து தங்களது 4 சக்கர வாகனங்களில் தமிழகம் வர அனுமதி கேட்கும் போது உரிய அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் வெளிமாநில பட்டாசு வியாபாரிகள் சிவகாசிக்கு வர முடியாமல் போனதால் வழக்கமான ஆர்டர்களும், அதற்கான முன்பணமும் இந்த ஆண்டு இன்னும் வரவில்லை.

இதனால் சிவகாசி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சிறு பட்டாசு உற்பத்தியாளர்களும், சில பெரிய நிறுவன உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்திய அரசு மொத்த பட்டாசு வியாபாரிகள் தங்கள் ஊரில் இருந்து சிவகாசிக்கு வந்து செல்ல உரிய அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு வரும் மொத்த வியாபாரிகள் தங்குவதற்கு தேவைப்படும் தங்கும் விடுதிகளை திறக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இந்த தொழிலையும், தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களையும் காக்க தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்