மத்திய-மாநில அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்தவில்லை திருநாவுக்கரசர் எம்.பி. குற்றச்சாட்டு
மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்தவில்லை என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகமான நேரு பவனத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடங்கி வைத்து நிவாரண பொருட்களை தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மத்திய-மாநில அரசுகள் போதுமான கவனம் செலுத்தவில்லை. கொரோனா சூழல் இன்னும் சில மாதங்கள் தொடரலாம் என்ற நிலை உள்ளது. பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது மட்டும் அரசாங்கத்தின் பணி கிடையாது. வீட்டில் இருக்கும் மக்களை பாதுகாக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு. இதுவரை நிவாரணமாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2 கோடி ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர்.
பரிசோதனை மையம்
தமிழக அரசின் பட்ஜெட் ரூ.3 லட்சம் கோடி என்ற நிலையில், ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் ரூ.7,500 நிவாரணமாக வழங்கினால் அரசு திவாலாகி விடாது. அரசாங்கத்திற்கு தாங்க முடியாத சுமையும் கிடையாது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து போதுமான பரிசோதனை நடத்தப்படவில்லை. சோதனை கூடங்கள் இன்னும் போதுமான அளவில் செயல்படுத்தப்படவில்லை. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை இலவசமாக வழங்கப்படுவது போல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அரசு நிவாரணமாக ரூ.1000 அளித்து விட்டு, கொரோனா சிகிச்சைக்கு தினசரி ரூ.10 ஆயிரம் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆகும் செலவை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அர்த்தமில்லை
கொரோனா தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களே அதற்கு பணம் கட்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஏழை,எளிய மக்களுக்கு இயலாத ஒன்று. கொரோனாவால் பாதிக்கப்படக் கூடிய அனைத்து மக்களுக்கும் இலவச சிகிச்சை அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் பசி பட்டினியின் காரணமாக இறப்பு பதிவாகவில்லை என்பதால் கொரோனா மீட்பு பணிகளை தமிழக அரசு சரிவர செய்கிறது என்று அர்த்தமில்லை. அரிசி மட்டுமே நாட்டின் குடிமகனுக்கு போதுமானதாக இருக்காது. தைப்பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் இலவச வேட்டி சேலை வழங்குவது போல் தற்போதுள்ள சூழ்நிலையிலும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
அப்போது மேற்கு மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், நகர காங்கிரஸ் தலைவர் சங்கர் கணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாலிங்கராஜா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.