தான் சேமித்த ரூ.57 ஆயிரத்துடன் தனியாக தவித்த மூதாட்டி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்
தனியாக தவித்த மூதாட்டி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 75). இவருக்கு கணவன், குழந்தைகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வந்தார். இவர் அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று மற்றவர்களிடம் தர்மம் பெற்ற ரூபாயை சேமித்து வைத்தார். அதன் மூலம் தற்போது ரூ.57 ஆயிரம் சேமித்ததாக தெரிகிறது. அதனை தனது பையில் வைத்துக் கொண்டு தெருவோரங்களில் படுத்து இருந்தார். கொரோனா சமயத்தில் அவருக்கு பலர் உணவு கொடுத்து வந்தனர். அவ்வாறு ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வேல்முருகனும் தினமும் அவருக்கு உணவு கொடுத்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டி வேல்முருகனிடம், தன்னிடம் உள்ள 57 ஆயிரம் ரூபாயை நீங்கள் வைத்து கொண்டு, என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுமாறு கேட்டுள்ளார். உடனே அவர் மூதாட்டிக்கு உதவி செய்ய எண்ணினார். அதன்படி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்பு அந்த மூதாட்டியை அவர் தளவாய்புரம் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.
மேலும் அவர் வைத்திருந்த 57 ஆயிரம் ரூபாயை அதன் முதியோர் இல்ல நிர்வாகியிடம் கொடுத்து அவரை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு தெரிவித்தார். தன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவி செய்த வேல்முருகனுக்கு மூதாட்டி பொன்னம்மாள் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.