ஊரடங்கால் வேலை இழந்த விரக்தி: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை

கம்பத்தில் ஊரடங்கால் வேலை இழந்த விரக்தியில் என்ஜினீயர் ஒருவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-06-08 01:17 GMT
கம்பம், 

தேனி மாவட்டம் கம்பம், கோம்பை சாலை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). இவருடைய பெற்றோர், அவர் குழந்தையாக இருக்கும்போதே கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் அவர், தனது தாத்தா பசுபதி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அசோக்குமார், என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அசோக்குமார், சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கம்பத்திற்கு திரும்பி வந்துவிட்டார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வேலை பறிபோனதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் வேலை இழந்த விரக்தியில் அசோக்குமார் நேற்று காலை கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறியுள்ளார். பின்னர் மேலிருந்து கீழே குதித்து அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்த அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை இழந்த விரக்தியில் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்