குடிபோதையில் தகராறு செய்த கணவரை கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி கைது
கோவையில் குடிபோதையில் தகராறு செய்த கணவரை கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருகே கருப்பக்காள் தோட்டத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 56). பெயிண்டர். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு மோகனபிரியா, லோகநாயகி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
சிவப்பிரகாசத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சிவப்பிரகாசம் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
கட்டையால் அடித்து கொலை
இதனால் அவரை மனைவி மகேஸ்வரி கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டது. இதில் சிவப்பிரகாசம் தனது மனைவியை தாக்கி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி, வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து சிவப்பிரகாசம் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்தார். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவப் பிரகாசம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மனைவி கைது
இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை செய்தனர். அதில் குடிபோதையில் தனது கணவர் தன்னிடம் தகராறு செய்ததுடன், தன்னை தாக்கியதால் மரக்கட்டையை எடுத்து அவரை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.