மாலத்தீவில் தவித்த 700 இந்தியர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தனர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது

மாலத்தீவில் தவித்த 700 இந்தியர்கள் கடற்படை கப்பல் மூலம் மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2020-06-07 23:00 GMT
தூத்துக்குடி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும் சுற்றுலாவுக்கும் சென்று வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, மத்திய அரசு ‘வந்தே பாரத்’ இயக்கம் மூலம் விமானம், கடற்படை கப்பல்களை பயன்படுத்தி வருகிறது.

அதன்படி ஏற்கனவே இலங்கையில் இருந்து 713 பேரை ‘ஆபரேசன் சமுத்திர சேது‘ திட்டத்தின் கீழ், இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ தூத்துக்குடிக்கு அழைத்து வந்தது. தற்போது அதே கப்பலில் மாலத்தீவில் இருந்து 700 பேர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த கப்பல் 655 ஆண்கள், 45 பெண்களுடன் கடந்த 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு மாலத்தீவில் உள்ள மாலி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை கப்பல் வந்தடைந்தது. அங்கு 14-வது கப்பல் தளத்தில் கப்பல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கப்பலில் இருந்து பயணிகள் இறங்க தொடங்கினர். அவர்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

முழுகவச உடையுடன் தயார் நிலையில் இருந்த சுகாதாரத்துறையினர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களின் உடைமைகளில் கிருமி நாசினி தெளித்தனர். பயணிகள், கை கழுவும் திரவம் மூலம் கைகளை சுத்தம் செய்தனர். தொடர்ந்து அவர்களை பஸ்கள் மூலம் பயணிகள் முனையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பயணிகளிடம் இருந்து சுய அறிவிப்பு படிவம் பெறப்பட்டது. பின்னர் வ.உ.சி. துறைமுகம் சார்பில் இலவச ‘வை-பை‘ வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்மூலம் அனைத்து பயணிகளும் செல்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து பயணிகளுக்கு குடியுரிமை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பயணிகள் அனைவரும் மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டு, பஸ்களில் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக 25 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அனைத்து பயணிகளுக்கும் காலை, மதிய உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆபரேசன் சமுத்திர சேது திட்டத்தின் கீழ், ஏற்கனவே இலங்கையில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் கடற்படை கப்பல் ‘ஜலஸ்வா‘ தூத்துக்குடி வந்து உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 509 பேர் உள்பட 700 பேர் வந்து உள்ளனர்.

கப்பலில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த 50 பேர் மற்றும் பீகார், உத்தரபிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தூத்துக்குடியில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதில் தொற்று இல்லாதவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கப்பலில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அறிகுறி இல்லாதவர்கள் பஸ்களில் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் ஈரானில் இருந்து சுமார் 700 பேருடன் புறப்படும் கப்பல் வருகிற 21-ந் தேதி தூத்துக்குடிக்கு வர உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பிமல் குமார் ஜா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவி ராஜ், முதன்மை பொறியாளர் ரவிகுமார், துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்