திருமணம், காதணி விழா ஊர்வலம் நடைபெறாததால் நாட்டிய குதிரை வளர்ப்பவர்கள் வருமானம் இழந்து தவிப்பு
நாட்டிய குதிரை வளர்ப்பவர்கள் வருமானம் இழந்து தவிப்பதோடு, குதிரைகளுக்கான தீவன செலவை கூட சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
கறம்பக்குடி,
திருமணம், காதணி விழா ஊர்வலம் நடைபெறாததால் நாட்டிய குதிரை வளர்ப்பவர்கள் வருமானம் இழந்து தவிப்பதோடு, குதிரைகளுக்கான தீவன செலவை கூட சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
நாட்டிய குதிரைகள்
தமிழ்நாட்டில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட முக்கிய விழாக்களில் நாட்டிய குதிரைகளின் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். திருமணத்தின்போது, மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். சிலர், குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளிலும் மாப்பிள்ளை ஊர்வலம் நடத்துவது உண்டு. இதேபோல் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்றவற்றுக்கு தாய்மாமன்கள் குதிரையில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வருவார்கள். சிலர் வசதிக்கு ஏற்றாற்போல் 5, 6 குதிரைகளை வைத்தும் ஊர்வலம் நடத்துவார்கள்.
இந்நிலையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருமணம், காதணி விழா போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணங்கள் சுமார் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் எளிமையாக நடத்தப்படுகிறது. இதனால் குதிரை ஊர்வலம் உள்ளிட்ட கோலாகல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வருமானம் இழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு, நெய்வேலி ஆகிய ஊர்களில் 50-க்கும் மேற்பட்ட நாட்டிய குதிரைகள் உள்ளன. இதேபோல் சாரட் வண்டிகளும் உள்ளன. தற்போது திருமணம், காதணி விழா ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், குதிரை வளர்ப்பவர்கள் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் குதிரைகளின் தீவன செலவை கூட சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து நாட்டிய குதிரை வளர்ப்பவர்கள் கூறுகையில், மங்கள நிகழ்ச்சிகளில் அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறோம் என்ற வகையிலும், பாரம்பரியம் என்ற வகையிலும் நாட்டிய குதிரைகளை வளர்த்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாததால் குதிரைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது. நிலைமை எப்போது சீராகும் என்ற நிச்சயமற்ற நிலையில் தவித்து வருகிறோம். குதிரை பராமரிப்பு செலவுகளை கால்நடைத்துறை மூலம் அரசு ஏற்க வேண்டும், என்றனர்.