தமிழகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படுகிறது அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2020-06-07 05:01 GMT
வலங்கைமான்,

தமிழகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

பாலம் கட்டும் பணி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம் மாணிக்கமங்கலத்தில் ராஜன் வாய்க்காலில் மாணிக்கமங்கலம் மற்றும் வேடம்பூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பாலங்கள் கட்டும் பணிகளை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் விரைவில் குணம் அடைய உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட தமிழகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை அமைப்பது, பாலங்கள் அமைப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பாராட்டு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்து அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.பி., கோபால், ஒன்றியக்குழு தலைவர் சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக கொட்டையூர் சர்வ மானியம் மாணிக்கமங்கலம், ராஜேந்திரன்நல்லூர், ஆலங்குடி, பூந்தோட்டம், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், துணைத்தலைவர் வாசுதேவன், திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவகுமார், குடவாசல் உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், வலங்கைமான் தாசில்தார் கண்ணன், ஒன்றிய ஆணையர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் எண்ணற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நலிவுற்ற புகைப்பட கலைஞர்கள், வேன், கார் டிரைவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நலிவுற்ற 425 புகைப்பட கலைஞர்கள் மற்றும் வேன்-கார் டிரைவர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆசைமணி, நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்