மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் உழவர் உழைப்பாளர் கட்சி அறிவிப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என உழவர் உழைப்பாளர் கட்சி அறிவித்து உள்ளது.
திருப்பூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என உழவர் உழைப்பாளர் கட்சி அறிவித்து உள்ளது.
மாநில செயற்குழு கூட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் உள்ள மூலம் உழவாலயத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் ஈஸ்வரன்,மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம், சர்வதேச ஒருங்கிணைப்பாளர் நல்லாக்கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கோவை மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம், ஈஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, மகுடேஸ்வரன், பழனிச்சாமி மற்றும் சங்கீதா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டம்
இந்த கூட்டத்தில், மின்சார திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும். வாபஸ் பெறாத பட்சத்தில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். சூறாவளியால் சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு விவசாயிகளின் கருத்து கேட்ட பின் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடை சந்தைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன், விசைத்தறி கடன் ஆகியவைகளை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.