திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்-மகன் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்-மகன் உள்பட மேலும் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-06-07 01:09 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்-மகன் உள்பட மேலும் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாய்-மகனுக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று தாய்-மகன் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 வயது சிறுவன்

இதில் திண்டுக்கல்லை அடுத்த கீழதிப்பம்பட்டியை சேர்ந்த 5 வயது சிறுவன், 21 வயது வாலிபர், 41 வயது பெண் ஆகியோரும், சிலுவத்தூர் ரோட்டை சேர்ந்த 27 வயது வாலிபர், பண்ணப்பட்டியை சேர்ந்த 27 வயது பெண், அவருடைய 5 வயது மகன் ஆகியோரும், தாடிக்கொம்பு காமராஜர்புரத்தை சேர்ந்த 29 வயது பெண், தாடிக்கொம்புவை அடுத்த பாறையூரை சேர்ந்த 25 வயது வாடகை கார் டிரைவர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும் மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், மூலச்சத்திரத்தை சேர்ந்த 56 வயது பெண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 29 வயது ஆண், வீரலப்பட்டியை சேர்ந்த 41 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இவர்களில் வீரலப்பட்டியை சேர்ந்த 41 வயது பெண் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர். மற்ற அனைவரும் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் ஆவார்கள். காமராஜர்புரத்தை சேர்ந்த 29 வயது பெண் தனது மகனுடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அதிர்ஷ்டவசமாக அவருடைய மகனுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிப்புக்குள்ளானவர்களிடம் நேரடி தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தாடிக்கொம்பு காமராஜர்புரம், பாறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், தெருக்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் கவச உடை அணிந்து கிருமிநாசினி மருந்து தெளித்தனர்.

வீடு திரும்பினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து பலர் வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த 4 வயது சிறுவன், ஆர்.எம்.காலனியை சேர்ந்த 65 வயது முதியவர், வத்தலக்குண்டு புதுப்பட்டியை சேர்ந்த 40 வயதான ஒருவர் என மொத்தம் 3 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்