நாளை வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி: கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு
கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி,
வழிபாட்டு தலங்கள் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
கோவில்கள் மூடப்பட்டன
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா கடற்கரை பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளது. திருப்பதி கோவிலை போல் இங்கும் அனைத்து வழிபாடுகளும் நடக்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அப்போது கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் மூடப்பட்டது.
நாளை முதல் அனுமதி
கோவில் மூடப்பட்டாலும் சாமிக்கு நடைபெறும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் வழக்கம் போல் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோவில்கள் மூடப்பட்டு 2 மாதங்கள் கடந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
அத்துடன் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க அரசு அறிவித்த வழிபாட்டு நெறிமுறைகளின்படி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.
சமூக இடைவெளி கட்டங்கள்
அதன்படி கன்னியாகுமரியில் வெங்கடாசலபதி கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் அரசு வழிகாட்டல்படி இடைவெளியுடன் கட்டங்கள், கோடுகள் வரையப்பட்டு வருகிறது. வெங்கடாசலபதி சன்னதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் மற்றும் கருடபகவான் சன்னதிகளில் இந்த பணிகள் நடந்து வருகிறது.
மத்திய அரசு நாளை முதல் கோவில்களை திறக்க அனுமதி அளித்தாலும், மாநில அரசு இதுபற்றிய உத்தரவை இன்னும் பிறப்பிக்கவில்லை.
மாநில அரசு முடிவு
எனவே, கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது தொடர்பான முடிவு, மாநில அரசின் அறிவிப்புக்கு பிறகே தெரிய வரும். அதன்பிறகே இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.